Tuesday, December 18, 2012

“வண்ணாத்திக் குருவி” புகைப் பட அனுபவங்கள் (14) - பொதிகையில் பேட்டி

No comments:
 
இந்தத் தொடரை எழுதி வரும் திரு நடராஜன் கல்பட்டு அவர்களின் புகைப்பட அனுபவங்கள் பேட்டியாக  பொதிகை தொலைக்காட்சியின் “பொன்னான முதுமை” நிகழ்ச்சியில் ஒளி பரப்பாக உள்ளது.

பேட்டி இரு பகுதிகளாக  நாளை டிசம்பர் 19 மற்றும் 26 தேதிகளில் மதியம் 3:30 மணியளவில் ஒளி பரப்பாக உள்ளன.

மீண்டும் இரு பகுதிகளும் டிசம்பர் 21 மற்றும் 28 தேதிகளில் நள்ளிரவு 12-00 மணிக்கு மறு ஒளி பரப்பாக உள்ளன.

பேட்டியோடு அவர் எடுத்த ஒளிப்படங்களையும் நிகழ்ச்சியில் காண்பிக்க இருக்கிறார்கள்.  

- PiT
---------------------------------------------------------------------------------------------------------------------------

வண்ணாத்திக் குருவி

பறவைகளில் தையல் காரரையும் நெசவாளியும் பார்த்தோம். இவர்கள் இருக்கும்போது ஒரு சலவைத் தொழிலாளி வேண்டாம்?

ஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி.  வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்?  வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக் குருவிக்கு இப்பெயரோ?  அல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ?

 #1

வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும்.  மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும்.  பிப்ரவரி மாதம் பிரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளை    களிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும்.  முதலில் சுருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் சுரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.  சுருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள்.  ராதை வேறு யாரும் இல்லை.  சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி தான்.  வீட்டு வேலை அதிகம் செய்வதால் அந்த நிறமோ!  இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும்.                       

இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவா?  எங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும்.  இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும்.  வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும்.

 வில்லன் மற்றொறு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வெண்டுமென்பதில்லை.  நீங்களாகக் கூட இருக்கலாம்.  ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.  அது உங்களையும் தாக்கும்.  நாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்து விட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.     சொந்த அனுபவத்தில் தான் இதைச்சொல்கிறேன்.

இந்த விஷயத்தை எனது அண்ணன் மகனிடம் சொன்ன போது அதை ஒரு கேலிச் சித்திரமாக்கி விட்டான் அவன்.  அந்தப் படம் இதோ:
வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும்.  கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும்.  செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும்.  குஞ்சுகள் வெளிவந்த பின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.

 வண்ணாத்திக் குருவியை 1965ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ.

 பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினக் கண்டு  நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க ஆரம்பித்தோம்.  அலுவலகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், "என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டனர்.  நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம்.  மூன்றாவது நாள் கும்பலாக வந்தவர்களில் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க அலுத்துப் போய் பதில் சொல்லாமல் நின்றோம் ஒரு கணம்.  மறு கணம் அவர்களில் ஒருவர், "விடுப்பா.  அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன்.  அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்!

அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது நாங்கள் வண்ணாத்திக் குருவியின் வருகைக்காகக் காத்திருக்கிறோம் என்பது!
***


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

&  

ஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் - தினகரன் வசந்தத்தில் நேர்காணல்

No comments:

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff