Saturday, December 8, 2012

பறவை உலகில் ஒரு நெசவாளி - புகைப் பட அனுபவங்கள் (13)

6 comments:
 
தையல்காரர் இருந்தால் அவர் தைத்திடத் துணி வேண்டாம்?  துணி வேண்டு மென்றால் அதை நெய்திட ஒருவர் வேண்டாம்?  பறவைகள் உலகில் ஒரு நெசவாளி இருக்கிறார்.  அவர் தான் தூக்கணாங் குருவி.
# 1
(தூக்கணாங் குருவி  படம்  நடராஜன் கல்பட்டு)

சிட்டுக் குருவி போன்றிருக்கும் இப் பறவையின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் பல ஆச்சரியம் அளித்திடும் விஷயங்கள் வெளி வரும்.  கூட்டமாக வாழ்ந்திடும் குணம் கொண்டவை இவை.  ஒரே மரத்தில் பல பறவைகள் தங்கள் தொங்கிடும் கூடுகளை அமைத்திடும்.

இந்தப் பறவை நெல், சோளம் போன்ற தாவரங்களின் இலையை நார் நாராகக் கிழித்துத் தன் கூட்டினை நெய்து கட்டும்.  நீர் நிலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கிளைகளில் இருந்து அழகான பந்து போன்ற கூடுகளுக்கு நுழைவு வாயில் கவிழ்த்துப் பிடித்த நாதசுரம் போன்று கீழ்ப் பக்கம் தொங்கிடும்.

 [கீழ்வரும் வண்ணப்படங்கள் கட்டுரைக்காக இணையத்திலிருந்து..]

 
#2


கூட்டினைக் கட்டுவது ஆண் பறவை.  அது பாதி கட்டி முடித்திருக்கும் கூட்டின் மீதமர்ந்து தன் இறக்கைகளைப் பட பட வென்று அடித்துக் கொண்டு கீச்சிடும் ஒரு பெண் பறவையின் கவனத்தை ஈர்த்திட.  பெண் பறவை வந்து பார்த்து, வீட்டின் தரம் பிடித்து, கூடி வாழ சம்மதித்து, கூட்டிற்குள்ளே குஞ்சுகள் வாழ்ந்திட பஞ்சு மெத்தை தயார் செய்ய ஆரம்பித்த  உடனே ஆண் பறவை அருகிலேயே மற்றொரு கூட்டினைக் கட்டி இரண்டாம் தாரம் தேடிடும்!  தாரம் இரண்டோடு நிற்குமா என்பதும் நிச்சயமில்லை!

#3
(ஆண் பறவை வீடுகட்ட....)

#4
(பெண் பறவை வீட்டின் தரம் பார்த்துத் தாரமாகிட....)

என்ன ஒரு சாமர்த்தியக் காரர் பார்த்தீர்களா இந்த நெசவாளி?

இவர்கள் மனைவி சேர்த்திடும் விஷயத்தில் மட்டும் தான் திருடர்கள் என்றில்லை.  ஒரு பறவை ஒரு நார் கொண்டு வந்து பின்னி விட்டு அடுத்த நார் எடுத்துவரப் போகும் போது பக்கத்தில் கூடு கட்டிக் கொண்டிருக்கும் வேறொரு பறவை கடைசியாக நெய்யப் பட்ட நாரினைத் தன் அலகினால் பிடித்திழுத்துத் தன் கூட்டினைக் கட்ட எடுத்துச் செல்லும்.  இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.  திருடர்கள் இல்லாத இடமே இல்லையா!

சில தூக்கணாங் குருவிகளுக்குப் பயித்தியமும் பிடிக்குமோ என்று ஒரு சந்தேகம் எனக்கு.  காரணம் ஆரம்பித்த கூண்டினை முடிக்கத் தெரியாது அதிலிருந்தே மீண்டும் மிண்டும் கட்டிக்கொண்டே போகும் சில பறவைகள்!

இயற்கையைப் படம் பிடிக்கப் போனால் பல வேடிக்கைகளைக் கண்டு ரசிக்கலாம் நீங்கள்.


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

6 comments:

  1. மிகவும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  2. சுவாரசியம். ஒரே மரத்தில் பல கூடுகள் பார்த்து, அவைகள் கூட அடுக்குமாடி குடியிருப்பு போல கட்ட ஆரம்பித்ததோ என்று எண்ணி இருக்கிறேன்... :)

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    அருமையான புகைப்படத் தொகுப்பு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. maravalam.blogspot.com/2012/12/blog-post.html?m=1

    ReplyDelete
  5. அருமையான படங்கள்.

    இதன் கூட்டைப்பார்த்து வியந்திருக்கின்றேன்.
    இரண்டு எக்சோரா இலைகளைப் பிணைத்து எங்கள் ஊர் வீட்டில் கட்டி இருந்தது.

    ReplyDelete
  6. நண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff